திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகில் ரூ.11 கோடி செலவில் வர்த்தக மையம்

திருச்சி மண்டலத்தில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என்று இங்குள்ள தொழில்துறையினர் அரசுக்கு தொடர்ந்து வழியுறுத்தி வந்தனர். அதன் எதிரொலியாக திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகில் ரூ.11 கோடி செலவில் “திருச்சி வர்த்தக மையம்” அமைக்கப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மீதம் உள்ள ரூ.6 கோடி நிதி தொழில்முனைவோர் மூலம் திரட்ட பரிந்துரை செய்யப்பட்டது. இதற்காக அரசு வழிகாட்டுதலின்படி “திருச்சி டிரேட் சென்டர் பிரைவேட் லிமிடெட்” (டிடிசிபிஎல்) என்ற அரசுசாரா நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. அத்துடன் இந்த நிறுவனம் தமிழ்நாடு நிறுவனங்களின் பதிவாளரின் கீழ் முறையாக பதிவு செய்யப்பட்டது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல் என்று திருச்சியை சுற்றி உள்ள தொழில்துறையினர் 200 பேர் உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 44 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.6 கோடி நிதி திரட்டப்படுகிறது.
புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்துக்குப்பிறகு திருச்சி வர்த்தக மையத்தின் சேர்மன் எம்.முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:- திருச்சி மண்டலத்தில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இந்த திட்டத்துக்கு கடந்த 2021-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கி வைத்துள்ளார். திருச்சி-மதுரை சாலை, திருச்சி-திண்டுக்கல் சாலையை இணைக்கும் வட்டச்சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவில் 9.42 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து, சிட்கோ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக திருச்சியில் பிரமாண்டமாக இந்த வர்த்தக மையம் இருக்கும். திருச்சி-திண்டுக்கல் அரைவட்ட சாலை பணி அமைக்க தாமதம் ஆனதால் திருச்சி வர்த்தக மைய கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் தாமதம் ஏற்பட்டது. தற்போது அரைவட்ட சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதால், திருச்சி வர்த்தக மைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, 2 ஆண்டுகளில் முழுமைபெறும். இங்கு 2500 பேர் அமரும் வசதியுடன் கருத்தரங்க கூடம், 250 ஸ்டால்களுடன் வர்த்தக கண்காட்சி நடத்தும் பெரிய அரங்கம் அமைய உள்ளது. மேலும் 500 கார்கள், 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் உணவு கூடம், அலுவலகம் அமைய உள்ளது. இங்கு தொழில் மாநாடுகள், கண்காட்சிகள், விற்பனையாளர்கள் கூட்டம், பொருட்காட்சிகள் நடத்தப்படுவதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் அதிக அளவில் பயன்பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....