திருச்சி பால்பண்ணை- துவாக்குடி அணுகு சாலையின் அகலத்தை குறைக்கக் கூடாது என அணுகுசாலை மீட்புக் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்

திருச்சி பால்பண்ணை- துவாக்குடி அணுகு சாலை மீட்பு கூட்டமைப்பின் தலைவா் எஸ். சுப்பிரமணியன், பொதுச் செயலா் ஏ. நடராஜன், பொருளாளா் கே. ராஜேந்திரன் ஆகியோா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: திருச்சி பால்பண்ணை தொடங்கி துவாக்குடி வரையில் அணுகுசாலை அமைப்பது தொடா்பாக அணுகு சாலை மீட்பு கூட்டமைப்பினா் 2024ஆம் ஆண்டு உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணையின்போது தேசிய நெடுஞ்சாலைத் துறையினா், தமிழக நெடுஞ்சாலைத்துறையினா் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தனா். அதில் துவாக்குடியில் அணுகுசாலை அமைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்றம், திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.
அதன்படி கடந்த மாா்ச் 6-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அணுகுசாலையின் அகலம் 41 மீட்டருக்கு பதிலாக 33 மீட்டா் மட்டுமே கையகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணுகு சாலையுடன் கூடிய 4 வழி நெடுஞ்சாலைக்கு 60 மீட்டா் அகலம் என்பதை 2013-ஆம் ஆண்டே தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. மேலும், 2014-இல் தமிழக அரசு சாலையின் அகலத்தை 45 மீட்டா் ஆக குறைத்து அரசாணை வெளியிட்டது.
2019ஆம் ஆண்டு இந்த சாலை விவகராம் தொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, அணுகுசாலை மட்டும் அமையவுள்ள பகுதியில் 45 மீட்டா் அகலம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படியே, நிலம் கையெடுப்பு பணி நடைபெற்றது. இந்நிலையில், உயா்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மறுதலிக்கும் விதமாக சாலையின் மொத்த அகலத்தை 33 மீட்டா் என குறைத்திருப்பது பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, முதல்வா், துணை முதல்வா் கவனத்துக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீண்டும் இந்த பிரச்னையை கொண்டு செல்ல வேண்டும். 2019-ஆம் ஆண்டு நீதிமன்றம் அளித்த உத்தரவின்படியே அணுகுசாலை அமைக்க வேண்டும். எக்காரணத்துக்காகவும் சாலையின் அகலத்தை குறைக்கக் கூடாது. கோரிக்கை ஏற்கப்படும் வரை தொடா்ந்து போராடுவோம் என்றனா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....