Trichy Birds Park: ஒரு ஸ்பாட் விசிட் அனுபவம்!
திருச்சி காவிரிக் கரையில் திறக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்கா குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் குதூகலப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சமே இல்லாமல் ஏங்கித் தவித்த திருச்சி மக்களுக்கு, இந்த பறவைகள் பூங்கா சொர்க்கபுரியாக திகழ்கிறது.
திருச்சி குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறையின் அருகே ரூ.20 கோடி செலவில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 60 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான வகையில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பூங்காவை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட நலப் பணிகள் நிதிக் குழு சார்பில் பராமரிக்கப்படும் இந்தப் பூங்கா, முகப்புப் பகுதியிலேயே காண்போரை சுண்டி இழுக்கிறது. அதிநவீன வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள நுழைவுவாயில், மெட்ரோ ரயில் நிலையத்தை நினைவூட்டுகிறது. அதன் தொடர்ச்சியாக சிறிய அளவிலான நீரூற்று செல்ஃபி பிரியர்களுக்கு கொண்டாட்டமாக விளங்குகிறது.
முதலில் பல்வேறு வகையான புறாக்கள் அணிவகுக்கின்றன. அனைத்தும் காண்பதற்கரிய இனங்களாக உள்ளன. அடுத்தாக, பல்வேறு கோழி வகைகள் ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளன. அதைத்தொடர்ந்து விதவிதமான வாத்து வகைகள் காண்போரை ஆச்சரியத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன. அவை நடப்பதும், நீந்துவதும் குழந்தைகளை குதூகலப்படுத்துகின்றன. அதையடுத்து, தத்தித் தாவிச் செல்லும் குட்டி முயல்கள் முதல் 10 கிலோ எடையுள்ள பெரிய முயல்கள் வரை பார்ப்பவர்களை பரவசப்படுத்துகின்றன.
அதைத் தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட மீன் வகைகள் நீந்தி திரியும் மீன்கள் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த மீன்கள் அருங்காட்சியகம் கடலின் அடிப்பகுதியில் இருந்து மீன்களை பார்ப்பதுபோல தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குண்டூசி அளவில் இருந்து 5 கிலோ எடையுடைய மீன்கள் வரை அணிவகுப்பதை பார்த்து, குழந்தைகள் துள்ளிக் குதித்து உற்சாகமாக குரல் எழுப்பி மகிழ்கின்றனர்.
அதன் பின்பு, பறவைகள் வசிக்கும் 30 அடி உயர கூண்டுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு உள்ளே செல்லும் அனைவருக்கும், பறவைகளுக்கு உணவாக சூரியகாந்தி விதைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அங்குள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலவகையான வண்ண வண்ண பறவைகள் பறந்து வந்து, யாரும் எதிர்பாராத வகையில் தோள்களிலும், கைகளிலும் அமர்ந்து கொஞ்சி விளையாடுவதும், நாம் தரும் சூரியகாந்தி விதைகளை அவை ஆனந்தமாய் உண்டு மகிழ்வதும் ஒரு சுகாபனுபவமாக இருக்கிறது.
அடுத்ததாக குழந்தைகள் கொண்டாடி மகிழக்கூடிய விளையாட்டு சாதனங்கள் உள்ளன. இதற்கென தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். அதே இடத்தில் பெரியவர்களுக்கு நாற்காலி மசாஜ் மற்றும் மீன் ஸ்பா உள்ளன. நாற்காலி மசாஜ் என்பது அதிநவீனமயம் என்றால், மீன் மசாஜ் சுத்த கிராமத்து ரகம். மீன்கள் விடப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் காலை வைக்கும்போது, மீன்கள் காலை கடிப்பது மசாஜ் செய்வது போல உள்ளது. அடுத்ததாக, 7டி திரையரங்கம் உள்ளது.
இதற்கு கட்டணம் ரூ.120. இங்கு ஒரே நேரத்தில் 40 பேர் அமர முடியும். மொத்தம் 2 அனிமேஷன் திரைப்படங்கள் காட்சியிடப்படுகின்றன. அங்கு வழங்கப்படும் அதற்கு உண்டான சிறப்பு கண்ணாடி அணிந்து கொண்டு இந்த திரைப்படங்களை பார்க்க வேண்டும். படம் பார்க்கும்போது, அமர்ந்திருக்கிற சேர் முன்பின் நகர்வதும், திரையில் காணும் மலர்களின் நறுமணத்தையும், புயல் காற்று வீசுவதையும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உணர முடிகிறது. இது குழந்தைகளுக்கு வித்தியாசமான உணர்வை தருகிறது.
கண்களுக்கும், மனதுக்கும் விருந்தளித்த பிறகு, சிறிது வயிற்றுக்கும் உணவளிக்கும் வகையில் கேன்டீன் வசதியும் உள்ளது. அங்கு குழந்தைகளுக்கு பிடித்தமான நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள், பழரசங்கள் கிடைக்கின்றன. மொத்தத்தில் பறவைகள் பூங்கா, திருச்சி மாவட்ட மக்கள் அல்லாது சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கும் புதுவித அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பூங்காவில் நுழைவுக் கட்டணமான பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.150 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 90 செ.மீ. உயரத்துக்குகீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். இந்த பூங்கா அனைவருக்கும் ஒரு புதுவித அனுபவத்தை தரும் வகையில் பிரம்மாண்டாக இருந்தாலும் நுழைவுக் கட்டணம் தான் சற்று அதிகம் என்கின்றனர் சில பார்வையாளர்கள். இதே வசதிகள் உள்ள தனியார் பூங்காக்களில் இதற்கு ரூ.1,400 வரை கட்டணம் வசூலிப்பதாகவும், பராமரிப்பு செலவு அதிகம் என்பதால் இந்தக் கட்டணமே மிகவும் குறைவு தான் என்கின்றனர் மாவட்ட நிர்வாகம் தரப்பில்.
பறவைகள் பூங்காவில் முழுக்க முழுக்க வெளிநாட்டு பறவைகள், கோழிகள், புறாக்கள், வாத்துகள் மட்டுமே உள்ளன. உள்ளூர் பாரம்பரிய பறவை வகைகளான கிளிகள், குயில்கள், கோழிகள், புறாக்கள் மற்றும் பாம்புகள் இல்லை. இந்திய வனவிலங்கு சட்டத்தின் கீழ் வரக்கூடிய பறவைகள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்த நிறைய நிபந்தனை, கட்டுப்பாடுகள் உள்ளதுதான் இதற்கு காரணம் என்கின்றனர் பூங்கா நிர்வாகிகள்.
நமது நாட்டின் அரிய வகை கிளிகள் உள்ளிட்ட பறவைகள், பாம்புகள், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களை காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம், நமது பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு குழந்தைகளுக்கு ஏற்படும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
பறவைகள் பூங்கா பொறுப்பாளரான ஆல்வின் கூறியபோது, ‘‘காலை, 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மறவைகள் பூங்கா செயல்படும். 45 பணியாளர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு பறவைகளுக்கான இனப்பெருக்க மையமும் உள்ளது. பூங்காவில் பறவைகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவை தாண்டினால், அவை பொதுமக்களுக்கு விற்கப்படும். பொதுமக்களும் இப்பூங்காவுக்கு பறவைகளை வழங்கலாம். அவை உரிய பரிசோதனைகளுக்கு பிறகு, தேவையென்றால் பூங்காவுக்குள் விடப்படும்’’ என்றார்.
பறவைகள் பூங்காவுக்கு நுழைவுச் சீட்டு பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளதால், அதை வழங்கும் கவுன்ட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். போதிய அளவு பார்க்கிங் வசதி செய்யப்படாததால் திருச்சி- கரூர் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தவிர்க்க விரிவான பார்க்கிங் ஏற்பாடுகளை செய்தால் நல்லது. பூங்காவில் மலர் கடிகாரம் பிரம்மாண்டமாகவும், அழகாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த கடிகாரம் சரியான நேரத்தைத் தான் காட்டுவதில்லை.