காவிரிக் கரைகளை பலப்படுத்தி பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தவும்,  கூடுதல் வசதிகள் செய்திடும் வகையில் திருச்சி மாநகராட்சி இரு புதிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

மாநகருக்குள் ஓடும் காவிரியில் கரைகளைப் பலப்படுத்தி பொதுமக்களுக்கு பயனுள்ள வசதிகளை ஏற்படுத்தித்தர முடிவு செய்துள்ளது. திருச்சி மாநகரில் 16 கி.மீ. தொலைவுக்கு காவிரி ஓடுகிறது. இதில், அம்மா மண்டபம், கீதாபுரம், ஓடத்துறை உள்ளிட்ட காவிரிக் கரையோரம் அமைந்துள்ள படித்துறைகள் காவிரியில் ஏற்படும் பெரும் வெள்ளத்தில் அவ்வப்போது சேதத்தை சந்தித்து வருகின்றன. குறிப்பாக கரைப்பகுதியில் உள்ள கட்டுமானங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும், இடிந்து விழுவதும் வழக்கமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டும், காவிரிக் கரைகளை பலப்படுத்துவதுடன், அதை பொழுதுபோக்கு அம்சங்களாக மாற்றவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இடங்களாக மாற்றித்தரவும் திருச்சி மாநகராட்சி களம் இறங்கியுள்ளது.

இதற்காக 2 புதிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கையும் தயாா் செய்துள்ளது. இதன்படி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓடத்துறை அருகே ரயில்வே பாலம் செல்லும் பகுதியில் காவிரிக் கரையில் சுமாா் 1.50 கி.மீ. தொலைவுக்கு கரையை பலப்படுத்தி அழகுபடுத்தப்படவுள்ளது. இதற்காக ரூ.14 கோடியில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கரையை அகலப்படுத்தி பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இதன் தொடா்ச்சியாக இரண்டாம் கட்டமாக காவிரிக்கரையில் அம்மா மண்டபம் தொடங்கி கீதாபுரம் வரையில் சுமாா் 750 மீட்டா் தொலைவுக்கு கரையைப் பலப்படுத்தி அகலப்படுத்தப்படவுள்ளது. அம்மாமண்டபம், கீதாபுரம் உள்ளிட்ட படித்துறைகள் தா்ப்பணம் அளிப்பதற்கான முக்கியப் பகுதிகளாக உள்ளன. தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கானோா் கூடுவா். இதுமட்டுமல்லாது நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். அவா்களுக்கு உரிய வசதிகளுடன் ஆங்காங்கே கூடாரங்கள் அமைக்கப்படும்.

காவிரியில் தண்ணீா் இல்லாத காலத்திலும் இங்கு வருவோருக்கு நீராட தண்ணீா் வசதியை அளிக்கும் வகையில் பிரமாண்ட தண்ணீா் தொட்டியும் அமைக்கப்படுகிறது. மேலும், தா்ப்பணம் முடிந்து சேகரமாகும் கழிவுகளை ஆங்காங்கே பசுமை குப்பைத் தொட்டிகளை கொண்டு சேகரித்து முறையாக அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பிரிவு அலுவலா்கள் கூறுகையில், ரூ.37 கோடியில் செயல்படுத்தப்படும் இந்த 2 திட்டங்களுக்கான மண்பரிசோதனை மேற்கொள்ள ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண்பரிசோதனை முடிந்து ஆய்வறிக்கை பெற்றவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும். இரு திட்டங்களையும் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தால் காவிரியில் குப்பைகள், பழைய துணிகள் வீசுவது தடுக்கப்படுவதுடன், கரைகளும் அழகுபடுத்தப்படும். பொதுமக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மாறும் என்றனா்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb