செல்வமகள் சேமிப்பு திட்டம்.. சுகன்யா சம்ரிதி யோஜனாவின் வங்கி கணக்கு முடக்கம்? திருச்சி கோர்ட் நறுக்

செல்வ மகள் சேமிப்பு திட்டமானது பொதுமக்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், திருச்சியில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் தொடர்பான வழக்கு ஒன்று பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வமகள் சேமிப்பு திட்டமானது, பெண் குழந்தைகளுக்கான அற்புதமான சேமிப்பு திட்டமாகும்.. வெறும் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, இந்த செல்வமகள் கணக்கை தாராளமாக ஆரம்பிக்கலாம். இதற்கு மாதா மாதம் செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.. ஒரு வருடத்துக்கு மொத்தமாக செலுத்தலாம்.
அதிகபட்சமாக வருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம். சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது, கணக்கு தொடங்கப்பட்ட அன்றிலிருந்து 21 வருடங்களில் முடிவு பெறும். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் சேமிப்பு தொகையை செலுத்த முடியும்
பெண் குழந்தை 18 வயதை எட்டும்போது அவர்களுடைய கல்வி செலவுக்கு இந்த முதலீட்டிலிருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம். குழந்தை பிறந்து 10 வருடங்கள் வரை இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளை மட்டுமே இணைக்க முடியும். பெண் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாமல், சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாகவும் கணக்கில் சேரலாம். குறைந்தபட்ச முதலீட்டு தொகை 250 ரூபாயாகும்.
முதலீடு செய்யப்படும் தொகையானது, முதலீட்டின் மீது கிடைக்கும் வட்டி, முதிர்வு தொகை என அனைத்துக்குமே இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வரி விலக்கு உண்டு என்பதால் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை இந்த செல்வ மகள் திட்டம் பெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்சியில் ஒரு சம்பவம் நடந்து தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கா நகரைச் சோ்ந்தவா் எஸ். ரங்கராஜன்.. 65 வயதாகிறது.. இவா், கடந்த 2015-ஆம் ஆண்டு, ஈரோடு எஸ்பிபி காலனியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில், தன்னுடைய பேத்தி (மகளின் மகள்) பெயரில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கினார்.
அக்கவுண்ட் ஆரம்பித்ததிலிருந்தே, ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தாா்... பிறகு தனக்கு வயதாகிவிட்டதால் தன்னுடைய பேத்திக்கு பாதுகாவலராக (கார்டியன்) தன்னுடைய மகளை நியமனம் செய்யும்படி போஸ்ட் ஆபீசில் கடிதம் தந்தார்..
ஆனால், அஞ்சல் துறையானது, ரங்கராஜன் தனது பேத்தி பெயரில் கணக்குத்தொடங்கி பணம் செலுத்தி வந்தது தவறு என்றும், சிறுமிக்கு தாய் அல்லது தந்தை 2 பேரில் ஒருவா்தான் கணக்கு தொடங்க முடியும் என்றும் கூறிவிட்டது. அத்துடன், ரங்கராஜன் அதுவரை செலுத்தி வந்த தொகைக்கு வட்டி எதுவுமின்றி திரும்ப பெற்றுக்கொள்ளும்படியும் சொல்லி, அவரது சேமிப்பு கணக்கையும் நிறுத்திவிட்டது.
இதைக்கேட்டு அதிர்ந்து போன ரங்கராஜன், இதுகுறித்து திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை ஆணையத்தின் ஆா். காந்தி, உறுப்பினா்கள் ஜே.எஸ். செந்தில்குமாா், ஆா். சாயீஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது விசாரணைக்குப் பிறகு அமர்வு சொன்னதாவது :
"அஞ்சல் துறையின் உத்தரவு எதேச்சதிகாரமானது... தாத்தா, பேத்தி பெயரில் கணக்கு தொடங்க முடியாதென்றால், அதனை அஞ்சல்துறை கணக்கு தொடங்கும்போதே சொல்லியிருக்கலாமே? அப்படி தாத்தாவிடம் தெரிவிக்காமல் விட்டது வங்கியின் சேவைக்குறைபாடாகும்.
எனவே, பேத்திக்காக, அவரது தாத்தா தொடங்கிய சுகன்யா சம்ருதி கணக்கை தொடா்ந்து இயக்க வேண்டும். ரங்கராஜன் மேற்படி கணக்கில் செலுத்திய தொகைக்கு இதுவரையிலான வட்டியையும் வங்கி வழங்க வேண்டும். ரங்கராஜனுக்குப் பதிலாக அவரது மகளை குழந்தைக்கு பாதுகாவலராக நியமிக்க வேண்டும்.
மேற்படி கணக்கை நிறுத்தி வைத்து, ரங்கராஜனுக்கு சேவை குறைபாடு ஏற்படுத்தி மன உளைச்சலை உண்டாக்கிய குற்றத்துக்காக அஞ்சல் துறைக்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.. அந்த அபராதத்தை ரங்கராஜனுக்கு செலுத்த வேண்டும்.. இந்த வழக்கு செலவு தொகையாக ரூ. 20,000 செலுத்த வேண்டும்" என்று கூறி நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb