திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு - அதிர்ச்சி

திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுள்ளார். இருப்பினும், அதைச் சாப்பிட்ட சில மணி நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மரணத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ்.. ரயில்வே ஊழியராக இவர், அப்பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் தான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ்.. அவருக்கு வயது 15. திருச்சியில் உள்ள பிரபல தனியார்ப் பள்ளியில் ஸ்டெபி 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
ஸ்டெபிக்கு நூடுல்ஸ் சாப்பிடுவது என்பது பிடிக்குமாம்.. இதனால் சில நேரங்களில் கடைகளில் நூடுல்ஸ் வாங்கியும் சில நேரங்களில் வீட்டிலேயே சமைத்தும் நூடுல்ஸை சாப்பிடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அடிக்கடி நூடுல்ஸை விரும்பி சாப்பிட்டு வந்துள்ளார். அப்படி தான் சனிக்கிழமை இரவு அவர் வழக்கம்போல் ஆன்லைனில் நூடுல்ஸ் பாக்கெட் ஆர்டர் போட்டுள்ளார்.
அது சில நிமிடங்களில் வீட்டிற்கே வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் நேற்று இரவு நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்துவிட்டார். இருப்பினும், காலை அவர் நீண்ட நேரமாகியும் எழவில்லை. குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்ற போது தான் அவர் உயிரிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. இன்று காலை இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதாவது ஸ்டெபி இறப்பில் சந்தேகம் உள்ளதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஸ்டெபி உடலைத் திருச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது ஸ்டெபியின் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்டெபியின் உடலைத் தர உறவினர்கள் மறுத்ததாக தெரிகிறது.
இருப்பினும், புகார் வந்துள்ளதால் நிச்சயம் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று போலீசார் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். ஸ்டெபி உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....