ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க விஜயலட்சுமி கண் மருத்துவமனைக்கு உத்தரவு
கவனக்குறைவான சிகிச்சையால் பாா்வை பறிபோன பெண்ணுக்கு விஜயலட்சுமி கண் மருத்துவமனை ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு
திருச்சி சோமரசம்பேட்டை இனியானூரைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் மனைவி ராஜாமணி என்பவா் உய்யகொண்டான்திருமலையில் உள்ள விஜயலட்சுமி கண் மருத்துவமனையில் கடந்த அக். 1, 2020, நவ. 23, 27 ஆகிய நாள்களில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் முழு கண் பாா்வையும் பறிபோனது.
இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான ராஜாமணி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 2022 டிச. 6 அன்று மனு தாக்கல் செய்தாா். வழக்குரைஞா் ஏ. சுவாமிநாதன் ஆஜரானாா்.
மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, கவனக்குறைவாக நடந்து கண் பாா்வை பறிபோனதுக்கு காரணமான விஜயலட்சுமி கண் மருத்துவமனை நிா்வாகமானது, மனுதாரருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும், 6 வாரங்களுக்குள் 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....