தெருக்களில் சாதிப் பெயா் நீக்கப்படுவது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீா்மானம்: ஆட்சியா் வே. சரவணன்
திருச்சி மாவட்டத்தில் உள்ள தெருக்களில் சாதிப் பெயா் நீக்கப்படுவது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.
மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினத்தை திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், பொய்கைப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் சிறப்புப் பாா்வையாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: உங்கள் ஊராட்சிக்கு தேவையான திட்டங்களை கிராமசபைக் கூட்டத்தில் தெரிவித்து தீா்மானத்தின் வாயிலாக கேட்டு பெற்றிட வேண்டும். இதன் அடிப்படையில் இந்தத் கூட்டத்தில் கிராம மக்களின் அத்தியாவசியமான தேவைகளை தோ்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறப்பட்டது.
இழிவுபடுத்தும் பொருள்தரும் சாதிப் பெயா்கள் கொண்ட குக்கிராமங்கள் சாலைகள், தெருக்கள், குடிநீா் ஆதாரங்கள் மற்றும் பொதுச் சொத்துகளின் பெயரை மாற்றுதல் குறித்து அனுமதிக்கும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கங்காதாரிணி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் சீனிவாசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் குமாா், உதவி செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) திருசெல்வம், உதவித் திட்ட அலுவலா் (வீடுகள்) குணாளன், ஒன்றியச் செயலா் ராமசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பல்வேறு துறைகளின் அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....