முதல்வர் புதுகை வருகை ரத்து; திருச்சியில் முதல்வரின் மனைவியை அழைக்க சென்ற சொகுசு கார் விபத்து காரணமா?

புதுக்கோட்டையில் நேற்று, சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் பேரன் திருமணம் நடந்தது. அமைச்சர் இல்லத் திருமண விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் பங்கேற்க வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நேற்று மாலை, 5:30 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் விமானத்தில், திருச்சி விமான நிலையம் வருவதாகவும், அதன் பின் சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்வதாகவும் கூறப்பட்டது. திடீரென, முதல்வரின் புதுக்கோட்டை பயணம் ரத்து செய்யப்பட்டது.
திருச்சி வந்து, புதுக்கோட்டைக்கு முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து வருவதற்காக நேற்று மாலை 3:30 மணிக்கு, 'பென்ஸ்' கார் ஒன்று, திருச்சி விமான நிலையம் நோக்கி சென்றது. திருச்சி தலைமை தபால் அலுவலகம் அருகே சென்ற போது, பைக் மீது மோதி அந்த கார் விபத்துக்குள்ளானது. இதில், பைக்கில் வந்தவரும், ஆட்டோ டிரைவர் ஒருவரும் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், தமிழக முதல்வர் வருகை ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என, தகவல்கள் கூறப்படுகின்றன.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....