திருச்சியில் ரூ.290 கோடியில் கட்டப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி இருக்கிறார். 

மதுரை புதூர் பகுதியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை விரிவுபடுத்தும் வகையில் கோவை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதிலும் திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நூலகம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், அதன் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்று மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கான பணிகளை தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சென்னையில் இருந்து வீடியோ வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூலகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இதற்காக ரூ.290 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திருச்சி டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. தரை தளம் உட்பட மொத்தமாக 7 தளங்களை கொண்ட கட்டடமாக அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்கான டெண்டர் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. திருச்சியில் அமையவுள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் அறிவியல் மையம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் பாட புத்தகங்கள் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் பல்நோக்கு கூடம், ரோபோட்டிக்ஸ் மற்றும் விளையாட்டு பகுதி, டிஜிட்டல் நூலகம், ஆங்கில நூலகம், அறிவு சார் மையம் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது.

மேலும், இரண்டு முதல் ஏழு தளங்களுக்கு செல்லும் வகையில் மின் தூக்கி சேவைகளும் அமைக்கப்பட உள்ளது. இதன் பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மதுரை கலைஞர் நூலகம் கட்டடப் பணிகள் விரைவாக நடத்தி திறந்து வைக்கப்பட்டன. அதேபோல் திருச்சியில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூலகம் மாணவர்கள், இளைஞர்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு மிகப்பெரிய பயனளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb