திருச்சி நகரின் பல பகுதிகளிலும் 10 ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்படி வசித்து வருபவர்களில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு பட்டா கிடைக்க போகிறது.

திருச்சி நகரின் பல பகுதிகளிலும் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் 1,128 குடும்பத்தினருக்கு பட்டா வழங்குவதற்கு மாநகராட்சி தடையின்மை சான்று அளித்துள்ளது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

திருச்சி மாநகராட்சி மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகராட்சியாக இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பலர் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வசிக்க தொடங்கினார்கள். அப்படி திருச்சி நகரின் பல பகுதிகளிலும் 10 ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

பலர் சாதாரண ஓட்டு வீடுகளிலும், சிலர் பங்களாக்களையும் கட்டி வசிக்கிறார்கள். இவர்களுக்கு பட்டா இருக்காது. எனினும் பத்திரப்பதிவு செய்திருப்பார்கள்.. மின்சாரம், குடிநீர், அனைத்தும் உள்ளது. பல ஆண்டுகளாக பட்டா கேட்டு இவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நீர் நிலைகள், குளம் போன்ற இடங்களை தவிர மற்ற ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.. தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 86 ஆயிரம் பேருக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி நிர்வாகங்களிடம் ஆட்சேபனையற்ற புறம்போக்கில் வசிப்பவர்களுக்ககாக தடையின்மை சான்று பெறும் முயற்சியில் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக அனுப்பப்பட்ட கோப்புகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்களது மன்ற கூட்டங்களில் பொருளாக வைத்து ஒப்புதல் அளித்து வருகின்றன.

திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 54-வது வார்டு பெரிய மிளகு பாறை பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 670-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள் என்று வருவாய் துறை வட்டாரங்கள் சொல்கின்றன. அதேபோல் பெரிய மிளகுபாறை காமராஜர் புரத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிப்பதாகவும், கோரிமேடு தெருவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் திருச்சி மேற்கு தாலுகா 27-வது வார்டு புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் 30 ஆண்டுக்கும் மேலாக 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிப்பதாகவும், 26-வது வார்டு திடீர் நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 50 குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், திருச்சி கிழக்கு தாலுகாவில் 12-வது வார்டில் 25 ஆண்டுகளாக குடியிருந்து வரும் 17 குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் வருவாய் துறை ஆவணங்களில் கூறப்படுகிறது.

மேலும் திருச்சி 60-வது வார்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 70 குடும்பத்தினர் வசிப்பதாகவும், திருச்சி மேற்கு தாலுகாவில் 8-வது வார்டில் 40 ஆண்டுகளாக 10 குடும்பத்தினர் வசிப்பதகாவும், புத்தூர் திரு வி.க. தெருவில் 25 குடும்பத்தினர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாகவும், ஆதி நகர் பகுதியில் 20 ஆண்டுகளாக 6 குடும்பத்தினர் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படி ஒட்டுமொத்தமாக திருச்சி மாநகரில் 1,128 குடும்பத்தினர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிப்பதாகவும், அவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு தடையில்லை என்பதற்கான சான்றை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் வழங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து திருச்சி வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதனால் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb