திருச்சி பஞ்சப்பூரில் 315 கோடியில் டைடல் பூங்கா.. முதல்வர் ஸ்டாலின் 13-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

பஞ்சப்பூரில் ரூ.315 கோடியில் அமைக்கப்பட உள்ள டைடல் பூங்காவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 13-ந்தேதி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
திருச்சி மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கட்டும் வகையில், திருச்சி மதுரை சாலையில் உள்ள பஞ்சப்பூர் பகுதியில் ரூ.490 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பஸ் முனையம், அதற்கான அணுகு சாலைகள், மழை நீர் வடிகால்கள் மற்றும் அடிப்படை வசதிகள், லாரி நிறுத்தும் முனையம், காய்கறி மொத்த வணிக வளாகம் ஆகியவை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திருச்சி புதிய பேருந்து முனையமானது நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் அளவிற்கு மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதில் பொது மக்களுக்கு தேவையான காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், மாற்றுதிறனாளிகளுக்கான பிரத்யேக தடங்கள், ஓய்வறைகள், குளிரூட்டபட்ட தங்கும் அறைகள், ஆம்னி பேருந்துக்கான தனி வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. வருகிறது. மேலும் இந்த பேருந்து முனையத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்லும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதேபோல் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை கட்டுப்பாட்டில் உள்ள எல்காட் நிறுவனத்தின் மூலம் ரூ.315 கோடியில் டைடல் பூங்கா (டைடல் பார்க்) அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த டைடல் பூங்காவானது சுமார் 14.6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கூடிய கட்டிடங்கள் 5.58 லட்சம் சதுர அடியில் கட்டப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா 13-ந் தேதி நடைபெற இருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுவார். இதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் விரைவாக தொடங்கப்பட இருக்கிறது. இந்த டைடல் பூங்காவின் மூலம் சாப்ட்வேர் துறையில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....