ரெயில்வே ஜங்ஷன் புதிய பாலத்துக்கு அணுகுசாலை அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. ரெயில் நிலையம் முன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திருச்சி மாநகரை ரெயில்வே தண்டவாளம் இரண்டாக பிரிக்கிறது. இதில் முக்கியமாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே மத்திய பஸ்நிலையத்தையும், மன்னார்புரத்தையும் இணைக்கும் பாலம் மிகவும் முக்கியமானது. மாநகரில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், இந்த பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இதை தவிர்க்க இரு கட்டங்களாக ரூ.168.34 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் நெடுஞ்சாலைத்துறை தொடங்கியது. முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம், எடமலைப்பட்டிபுதூர் சாலையை இணைக்கும் பணிகள் முடிவுற்றது.

ஆனால், சென்னை - மதுரை சாலையை இணைக்கும் வகையில் மன்னார்புரம் பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தைபெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி முடிவடையாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. பின்னர், 0.633 ஏக்கர் ராணுவ இடம் பல ஆண்டு போராட்டங்களுக்கு பிறகு கிடைத்தது. இதை தொடர்ந்து, பணிகள் நிறைவடைந்து, கடந்தாண்டு மே மாதம் அந்த பாலம் முழுமையாக மக்கள் பயன்பாட் டுக்கு வந்தது.

2-வது கட்டமாக கல்லுக்குழியில் இருந்து, மத்திய பஸ் நிலையம் செல்லும் ஜங்ஷன் பழைய பாலத்துக்கு பதிலாக புதியபாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. ஏற்கனவே, ஒதுக்கீடு செய்யப் பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் கூடுதல் நிதி வேண்டி நிர்வாக அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது

ரெயில்வே போக்குவரத்துக்கு எதிர்கால திட்டமிடலை கவனத்தில் கொண்டு புதிய மேம்பாலம் வரைபடத்தை உருவாக்குமாறு ரெயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தயாரித்த மேம்பாலத்துக்கான திட்ட வரைபடம் சரியில்லை எனக் கூறி ரெயில்வே நிர்வாகம் அனுமதி தர மறுத்துவிட்டது. பின்னர் அந்த திட்டம் திருத்தி அமைக்கப்பட்டதை தொடர்ந்து ரூ.16 கோடியில் புதிய மேம்பாலம் கட்ட ரெயில்வே நிர்வாகம் அனு மதி வழங்கியது. இதைத்தொடர்ந்து புதிய பாலம் அமைப்பதற்கான திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து திருச்சி ஜங்ஷன் பழைய பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டும் போது, அணுகு சாலைகள் அமைக்க வேண்டும். அதற்காக நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அத்துடன், இதற்காக ரெயில் நிலையம் முன் இருந்து பழைய பாலம் வரை ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக சுற்றுச்சுவரை ஒட்டி உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, புதிய பாலம் நடைபாதையுடன் 770 மீட்டர் நீளத்திலும், 13.50 மீட்டர் அகலத்திலும் அமையவுள்ளது. மேலும் ரெயில் நிலைய சந்திப்பு சாலையை இணைக்க 158 மீட்டர் நீளத்திற்கு இரு வழி அணுகு சாலைகள் அமைக்கும் வகையில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதத்தில் புதிய பாலம் கட்டும் பணிதொடங்கப்படும். புதிய பாலப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக பழைய பாலத்தில் போக்குவரத்தை நிறுத்த காவல்துறையினருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். என்றனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb