திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஊட்டி மலை ரயில் இன்ஜின் வியாழக்கிழமை ஊட்டிக்கு அனுப்பப்பட்டது.

பாரம்பரியமிக்க ஊட்டி மலை ரயிலானது நூறாண்டுகளுக்கு மேல் உதகையின் அழகை பயணிகள் கண்டுகளிக்க பெரிதும் பயன்படுகிறது. சிறப்பு மிக்க இந்த ரயிலின் என்ஜின்கள் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டவை.

இந்த ரயில் இன்ஜின்களில் ஒன்று கடந்த டிசம்பா் மாதம் பராமரிப்புப் பணிகளுக்காக பொன்மலை பணிமனைக்கு அனுப்பப்பட்டு, சுமாா் ரூ. 4 கோடியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை நடைபெறும் பராமரிப்புப் பணிகள் பொன்மலை ரயில்வே ஊழிா்களின் கடின உழைப்பால் 6 மாதங்களில் முடிக்கப்பட்டன.

இதையடுத்து பொன்மலை பணிமனையிலிருந்து வியாழக்கிழமை புதுப்பொலிவுடன் மலை ரயில் இன்ஜின் ஊட்டிக்கு அனுப்பப்பட்டது. நிகழ்வில் பணிமனை தலைமை மேலாளா் சந்தோஷ்குமாா் பாத்ரா தலைமையில் திரளான ரயில்வே ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

https://youtu.be/XlP_tXbajx0