உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் வேப்பூரில் கட்டப்பட்ட மேம்பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டதை தொடர்ந்து, 6 ஆண்டு காலமாக தொடர்ந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு நிரந்தர கிடைத்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி வரை 137 கிலோமீட்டர்  துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில், அடிக்கடி வாகன விபத்துக்கள் நடக்கும் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை நிறுவனம் ஆய்வு செய்தது. அதில் உளுந்தூர்பேட்டை - சிறுவாச்சூர் இடையே 76 கிலோமீட்டர்  துாரங்களில், சாரதா ஆஸ்ரமம் பகுதி, பாலி, ஆசனுார், வேப்பூர், ஆவட்டி, சிறுவாச்சூர் ஆகிய 6 இடங்கள் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டது. இந்த பகுதிகளில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தது.

கடந்த 2019ம் ஆண்டு இந்த ஆறு இடங்களில் மேம்பால பணி அமைக்க 68 கோடியே 7 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கப்பட்டது. மேம்பாலம் பணிகளை திருச்சி டோல் வே.பி.லிட் நிறுவனம் மேற்கொண்டது. கடலுார் மாவட்டம், வேப்பூர் தவிர மற்ற இடங்களில் மேம்பாலம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

வேப்பூரில் 2019 ஆண்டு துவங்கிய மேம்பால பணிக்கு மண் பற்றாக்குறையாலும், கொரோனா பரவலால் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியதாலும் தொய்வு ஏற்பட்டது. இதனிடையே 2022ம் ஆண்டு, பேருந்து நிலையம் எதிரே அமைக்கும் மேம்பாலத்தின் உயரத்தை 4 மீட்டரிலிருந்து 5 மீட்டராக உயர்த்த கோரி போராட்டம் நடத்தினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வேப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கதிர்வேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போதைய மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவின்பேரில், வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் - பொதுமக்கள் கூட்டம் நடந்தது.

இதில், அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்று, பொதுமக்கள் மேம்பாலம் கட்ட சம்மதித்ததை தொடர்ந்து, 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் பணி துவங்கியது. மீண்டும் மண் பற்றாக்குறை, நீதிமன்ற வழக்கு காரணமாக பணியில் சுணக்கம் ஏற்பட்டது. சமூக ஆர்வலர் கதிர்வேலு தொடர்ந்த வழக்கை, கடந்த 2024 ஜூன் மாதம் 13ம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதையடுத்து, கட்டுமான பணி துவங்கியது. 2025ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் பணியை முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு தேசிய நெடுஞ்சாலை துறை இறுதி கெடு விதித்தது. இதையடுத்து பணிகள் துரிதமாக நடந்து முடிந்தது.

திருச்சி மண்டல NHAI திட்ட இயக்குனர் பிரவீன்குமார், மேலாளர் ராகுல், பொறியாளர் அசாக்குமார் ஆகியோர் அவ்வப்போது பார்வையிட்டு ஆலோசனை வழங்கி, பணிகளை விரைந்து முடித்தனர். NHAI விதித்த கெடுவின் இறுதி நாளான மார்ச் 31ம் தேதி நள்ளிரவு முதல் வேப்பூர் மேம்பாலத்தில் போக்குவரத்து துவங்கியது. இதனால் கடந்த 6 ஆண்டு காலமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்ட பொது மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

மேலும், மேம்பாலத்தில் இரவு நேர பயணத்தின்போது விபத்தை தவிர்க்க விளக்குகள் அமைக்க வேண்டும். மேம்பாலத்தில் பிரதிபலிப்பான்கள் பொருத்த வேண்டும். பைக்குகள் செல்ல பாலத்தின் சாலையோரத்தில் வெள்ளைக் கோடுகள் அமைக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் நேராக செல்லும் வகையில் சுரங்க பாதையை திறந்து செல்ல அனுமதியளிக்க வேண்டும். என கோரிக்கை விடுத்துள்ளனர்

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/BXKVDj6xV1jE6ZPiwp79ix