திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான இன்னொரு பள்ளியின் மீது கற்கள், கட்டையை வீசி பொதுமக்கள் சூறையாடிய நிலையில் பள்ளி தாளாளரின் கணவர் உள்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மணப்பாறைப்பட்டி பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளியில் பயிலும் 4ம் வகுப்பு பயிலும் 9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது நேற்றைய தினம் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை வெளியே அனுப்பிவிட்டு பள்ளி அறங்காவலரும், பள்ளி தாளாளர் சுதாவின் கணவருமான வசந்தகுமார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளி முடிந்த பிறகு தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அந்த சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அவர்கள் அதரி்ச்சியடைந்தனர். மாணவியின் பாட்டி பாக்கியலட்சுமி சார்பில் உடனடியாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

மணப்பாறை மகளிர் போலீசில் பள்ளி தாளாளரின் கணவர் வசந்தகுமார் உள்பட பள்ளி நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் கடும் கோபமடைந்தனர்.

இதையடுத்து பள்ளி மாணவி பயிலும் பள்ளி நிர்வாகம் நடத்தும் இன்னொரு பள்ளியின் முன்பு திரண்டு கல், கட்டைகளை எடுத்து பள்ளி மீது வீசி எறிந்தனர். இதில் வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பூந்தொட்டிகளும் தூக்கி வீசப்பட்டு உடைக்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரையும் அடித்து உதைத்து தலைகீழாக கவிழ்த்தனர். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தையை அவர்கள் கேட்கவில்லை. தவறு செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறினர். மேலும் திருச்சி - திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

எஸ்பி செல்வ நாகரத்தினம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். தவறு செய்தவர்களை கைது செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் மணப்பாறை தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பள்ளி தாளாளரின் கணவர் வசந்தகுமார், பள்ளியின் தலைவர் மாராச்சி, தாளார்சுதா, துணை தாளாளர் செழியன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி தலைமறைவாக இருந்தார். இன்று காலையில் அவரும் போலீசில் சரணடைந்தார். இதையடுத்து ஜெயலட்சுமியையும் போலீசார் கைது செய்தனர். இதன்மூலம் வழக்கு தொடர்பான கைதானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து அரசு துறையினருடன் இணைந்து விழிப்புணர்வுமுகாம் நடத்தப்பட்டு வரும் சூழலில் வரும் காலங்களில் விழிப்புணர்வு முகாமை தீவிரப்படுத்த திருச்சி எஸ்பி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.