திருச்சி மத்திய பேருந்து நிலையம் இடிக்கப்படும் எனக் கூறுவது வதந்தி

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பஞ்சப்பூருக்கு வருவதால், திருச்சி மத்திய பேருந்து நிலையம் இடிக்கப்படும் எனக் கூறுவது வதந்தி என திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தினா் திட்டவட்டமாகத் தெரிவித்தனா்.
பஞ்சப்பூா் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு, அங்கிருந்துதான் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும். இதனால் போதுமான பயன்பாடில்லாத நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை முழுமையாக இடித்து, இதர வருவாய் தரும் இடமாக மாற்ற மாநகராட்சி முயற்சிக்கிறது. இதன் காரணமாகவே, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் மேம்படுத்தப்படாமலும், பேருந்து நிலையப் பராமரிப்பை முழுமையாக கைவிட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பேசிக் கொள்கின்றனா். இது தொடா்பாக, சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகச் செய்திகள் பரப்பப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி உயரதிகாரிகள் கூறியதாவது:
பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறக்கப்பட்ட பிறகு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இயங்கும் வெளியூா் பேருந்துகள், ஆம்னிப் பேருந்துகள் அனைத்தும் பஞ்சப்பூருக்குச் செல்லும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் இடிக்கப்படாது.
மாறாக, உள்ளூா் பேருந்துகள் வந்து செல்லும் இடமாகவும், இதர வருவாய் பெருக்கும் இடமாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, பேருந்து நிலையத்தில் மிக மோசமாக உள்ள சில பகுதிகள் வேண்டுமானால் இடிக்கப்படலாம். அதுவரை கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைபாடற்ற வகையில் இயங்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் கூறியதாவது:
திருச்சி மாநகரிலும் அனைத்துச் சாலைகளும் திருச்சி மத்திய, சத்திரம், காந்தி சந்தையை நோக்கி உள்ளன. இதில், மாநகரின் இதயமாக மத்திய பேருந்து நிலையம் விளங்குகிறது.
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தொடங்கப்பட்டாலும், மத்திய பேருந்து நிலையம் முழுமையாக இடிக்கப்படாது. மத்திய பேருந்து நிலையத்தை வருவாய் தரும் இடமாக மாற்ற உரிய ஆலோசனைகளை வழங்க தனியாா் ஆலோசகரை (கன்சல்டன்சி) நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அவா்கள் அறிக்கை அளித்ததும், பேருந்து நிலையம் வருவாய் அளிக்கும் இடமாக மாற்றப்படும். மத்திய பேருந்து நிலையம் முழுமையாக இடிக்கப்படும் எனக் கூறுவது வதந்தி என்றாா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....