திருச்சி மாநகரில் முக்கிய சாலைகளை இணைக்கும் பாலங்களான பாலக்கரை மற்றும் தென்னுார் பாலங்களின் பராமரிப்பு பணிகள் கோட்டை ரயில்வே புதிய மேம்பால கட்டுமான பணிகளுக்கு பின் துவங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் நகரில் அமைந்திருக்கும் 3 பாலங்கள்  தென்னூர், பாலக்கரை மற்றும் ரங்கம் பாலங்கள் ஆகும். இதில் தென்னூர் மேல்பாலத்தின் நடுவே இணைப்பு பகுதியில் சற்று விரிசல்கள் காணப்படுகிறது. அதேபோல் பாலக்கரை மேம்பாலத்திலும் பீமநகர் இணைப்பு பகுதிகளில் விரிசல்கள் காணப்படுகிறது. இந்த பாதிப்பு 2024ம் ஆண்டு துவங்கும் முன்பே கண்டறியப்பட்டது. தென்னுார் மேம்பாலம் கடந்த 1999ம் ஆண்டு கட்டப்பட்டது.

இதனால் போக்குவரத்து பாதுகாப்பு கருதி பாலத்தில் அவ்வப்போது போக்குவரத்துக்கு பாதிப்பின்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் பாலக்கரை மேம்பாலத்திலும் பராமரிப்பு பணிகள் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பில்லாத வகையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி பொறியாளர்களிடம் கேட்டபோது, தென்னூர் பாலம் கட்டி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகி விட்டது, பாலக்கரை பாலமும் கட்டி 19 வருடங்களாகி விட்டது. இந்த பாலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் கோட்டை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி ஆரம்பித்துவிட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.

தற்போது மாநகராட்சி கோட்டை மேம்பாலத்தை அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. ரயில்வே சார்பில் கட்டப்பட வேண்டிய பகுதிகளுக்கும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதேவேளையில் தென்னுார் மற்றும் பாலக்கரை பாலங்களில் பராமரிப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ள தேவையில்லை. பாலத்தின் உறுதிதன்மையில் தற்போது வரை பெரியதாக எந்த பாதிப்பும் இல்லை. தற்போது இந்த 2 பாலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் நகரில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்படும். இதனால் அதிக சிரமம் அடைவது வாகன ஓட்டிகள் தான். கோட்டை ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்தவுடனேயே தென்னூர் மற்றும் பாலக்கரை பாலங்களில் ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு பாலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb