புராதன பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடம் கட்டணம் வசூல் - பொதுமக்கள் புகார்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் எஸ்ஆர்சி கல்லூரி அருகே பட்டர் வொர்த் ரோடு பகுதியில் அமைந்துள்ள புராதன பூங்காவில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்கின்றனர். அவ்வாறு “வாக்கிங்” செல்ல வருபவர்களிடம் ஊழியர்கள் சிலர் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், வாக்கிங் செல்பவர்களிடம் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி சார்பில் எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. பூங்காவில் நீண்ட நேரம் பொழுதை கழிப்பவர்களிடம் மட்டுமே பராமரிப்பு கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டால் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படுகிறது. நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு தனியாக இட வசதி ஏற்படுத்திக் கொடுத்து கட்டணம் வசூலித்தால் கூட பரவாயில்லை. எந்த இடவசதியும் ஏற்படுத்திக் கொடுக்காமல் கட்டணம் வசூலிப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இந்த புராதன பூங்கா, மாதம் 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இவ்வாறு வசூலித்து இருக்கலாம்.ஆனால் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த விஷயத்தில் திருச்சி மாநகராட்சி இளம் ஆணையர் மு.சரவணன் ஐஏஎஸ் நேரடியாக தலையிட்டு கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் வாக்கிங் செல்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை கைவிட அறிவுறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....