திருச்சியை தலைமையிடமாக கொண்டு தனி போக்குவரத்து கோட்டம் - திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேட்டி
திருச்சிக்கு தனிப் போக்குவரத்து கோட்டம் தேவை என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தின் கீழ் கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர், நாகை ஆகிய 6 மண்டலங்கள் தற்போது இருக்கின்றன.
கும்பகோணம் கோட்டம் உருவான போது, கும்பகோணம் கோட்டம் என்ற பெயரில் என்ன இருக்கிறது? என்று திருச்சி மக்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். அப்போது கும்பகோணம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அதன் பின்னர் தான் நிறைய போக்குவரத்து வசதிகள் கிடைத்தது. ஆனால் திருச்சி மாவட்டத்துக்கு போதுமான வசதிகள் கிடைக்க வில்லை.
இதனால் அரசு போக்குவரத்து கழகத்தில் தமிழகத்திலேயே மிகப்பெரிய கோட்டமாக விளங்கும் கும்பகோணத்திலிருந்து சில மாவட்டங்களை பிரித்து, திருச்சி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டத்தை உருவாக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி,
கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் வரும் திருச்சி நகரம் சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்த பெரிய நகரமாக உள்ளது. இங்கு பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி போக்குவரத்துக் கோட்டம் தேவைதான். இதை போக்குவரத்துத் துறை அமைச்சரின் கவனத்துக் கொண்டு செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.