திருச்சி அருகே துவாக்குடியில் சுங்கச்சாவடி கட்டண உயா்வுக்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது.

காலாவதியான சுங்கச் சாவடிகளை உடனடியாக மூட வேண்டும், தமிழ்நாட்டில் 9 சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்பட வேண்டும், புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்கக்கூடாது, சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதில் ஒரு பகுதியாக திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும், மணப்பாறை எம்எல்ஏ-னமான அப்துல் சமது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் சுங்கச்சாவடிக்குள் நுழைந்து கற்களை வீசி தாக்கியும், கையில் கிடைத்ததை வைத்தும் அங்குள்ள கண்ணாடிகள், சிசிடிவி கேமராக்கள், தடுப்புகளை அடித்து உடைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கட்சிநிர்வாகிகளும் போலீசாரும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று முற்றுகையிட்டு நடந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லாமல் கூடியது, சுங்கச்சாவடி சேதப்படுத்தியது என இரண்டு பிரிவுகளில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது உள்பட 300 பேர் மீது இரண்டு பிரிவின் கீழ் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb