ரயில் அருங்காட்சியத்திற்கு மேலும் ஒரு அடையாளத்தை சேர்க்கும் வகையில் ரயில்வே கேண்டீன் ஒன்றும் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியது.

ஆனால் இதற்கான பணிகள் அனைத்தும் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த கேண்டீன் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்து இருக்கிறது. இந்த ரயில்வே கேண்டீனில் நிஜ ரயில் பெட்டியை வைத்து அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அருங்காட்சியகத்தின் வலதுபுற காம்பவுண்ட் சுவர் அகற்றப்பட்டு ரயில்வே தண்டவாளம் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இந்த ரயில் பெட்டியானது நிறுத்தப்பட்டுள்ளது.

பழைய ரயில் பெட்டியை ரயில் அருங்காட்சியகத்தில் உள்ள உணவகமாக மாற்றுவது தொடர்பான 80%க்கும் அதிகமான பணிகள் முடிவடைந்த நிலையில், முழுத் திட்டமும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தனித்துவமான உணவு அனுபவத்தை வழங்குவதற்காக, ரெயில் பெட்டியின் உட்புறப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு அருகாமையில் அமைந்துள்ள ரயில் அருங்காட்சியகத்திற்குள் 'Restaurant on Coach' அமைப்பதற்கான பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு, கான்கிரீட் தரைத்தளத்தில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது. திருச்சியில் உள்ள கோல்டன் ராக் ரயில்வே பணிமனையில் இருந்து பழமையான மற்றும் பயன்படுத்தப்படாத அகல ரயில் பெட்டியை உணவகமாக மாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டது.

ஒரு தனியார் நிறுவனத்திற்கு பெட்டியைப் புதுப்பித்து அதை ஒரு உணவகமாக மாற்றி ஐந்து ஆண்டுகளுக்கு இயக்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. குழாய்கள் மற்றும் தரை ஓடுதளம் அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட 85% பணிகள் முடிவடைந்துள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெட்டியின் உட்புறப் பணிகள் முழுவதுமாக மாற்றியமைக்க தற்போது நடைபெற்று வருகின்றன. புதுப்பிக்கப்பட்ட பெட்டியில் அறைகலன்கள் மற்றும் பிற உபகரணங்கள் இருக்கும்.

புதுப்பிக்கப்பட்டவுடன், புதிய தோற்றப் பெட்டியில் சுமார் 100 முதல் 120 இருக்கைகள் கொண்ட சாப்பாட்டு அறை மற்றும் பார்வையாளர்களுக்கு ஏராளமான உணவுப் பொருட்களை வழங்குவதற்கு உள்ளே ஒரு சமையலறைக்கு தனி இடம் இருக்கும். மறுசீரமைப்பு பணிகள் ஆறு வாரங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, உரிமம் பெற்றவர் ஒப்பந்தத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு ஆண்டுக்கு உரிமக் கட்டணத்தை செலுத்துவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

'Restaurant on Coach' என்பது ரயில் கட்டணமில்லா வருவாயை ஈட்டுவதற்கும், குளிரூட்டப்பட்ட புதுப்பிக்கப்பட்ட ரயில் பெட்டிக்குள் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணவு அனுபவத்தை வழங்குவதற்குமான ஒரு முயற்சியாகும்.

இந்த பணிகள் அனைத்தும் விரைந்து நடைபெற்று வருவதால் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb